*** BREAKING NEWS ***திருவாரூர் அருகே தமுமுக நிர்வாகி படுகொலை ***

Thursday 2 July 2009

வாஷிங்டன்: ஈரானால் ஈராக்குக்கு ஆபத்து ஏற்படும் என பயந்த சதாம் உசேன், தன்னிடம் அபாயகரமான நாசகார ஆயுதங்கள் இருப்பதாக காட்டிக் கொண்டார். உண்மையில் ஈராக்கிடம் அப்படி எதுவும் இல்லை என்பதே உண்மை என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.சதாம் உசேன் பிடிபட்ட பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது இது தெரிய வந்ததாக எப்பிஐ தெரிவித்துள்ளது. 2004ம் ஆண்டு ஜூன் மாதம் சதாம் உசேனிடம் நடந்த விசாரணையின்போது இந்தத் தகவல்களை சதாம் தெரிவித்தாராம்.இந்தத் தகவல்கள் இதுவரை ரகசிய ஆவணமாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது இவற்றை எப்பிஐ வெளியிட்டுள்ளது.எதிரிகளின் கண்ணில் ஈராக் பலவீனமான நாடாக பார்க்கப்படக் கூடாது என்று விரும்பினார் சதாம். குறிப்பாக ஈரான் தன்னைப் பார்த்து பயப்பட வேண்டும் என விரும்பினார்.இதனால்தான் ஈராக்கிடம் நாசகார ஆயுதங்கள் இருப்பது போல அவர் காட்டிக் கொண்டார். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இல்லை என்று சதாம் தெரிவித்தார்.ஈராக்கின் பலவீனங்களை ஈரான் கண்டுபிடித்து வருவதாக உணர்ந்த சதாம், அதிலிருந்து ஈராக்கைக் காத்துக் கொள்ள பெருமளவில் ஆயுதங்கள் இருப்பது போல காட்டிக் கொண்டதாக விசாரணையில் தெரிவித்தாராம் சதாம்.அமெரிக்காவை விட ஈரான்தான் தனது முதன்மையான எதிரி என்று சதாம் நினைத்தார். ஆயுதங்கள் இருக்கிறதா என்பதைப் பார்வையிட ஐ.நா. குழுக்கள் வருகை தர முயன்றபோதெல்லாம் அவர் தடுத்ததற்கும் இதுவே காரணம். எங்கே குட்டு உடைந்து விடுமோ என்ற பயத்தில்தான் அவர் எந்தக் குழுவையும் ஈராக்குக்குள் அனுமதிக்காமல் இருந்து வந்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.ஈரானுக்கும், ஈராக்குக்கும் 1980ம் ஆண்டு போர் வெடித்தது. 1988ம் ஆண்டு வரை அது நீடித்தது. அந்த சமயத்தில் ஈராக் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.2003ம் ஆண்டு ஈராக் மீது ஜார்ஜ் புஷ் போர் தொடுத்தார். மக்களைக் கொல்லும் நாசகார ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக கூறித்தான் இந்த போர் தொடுக்கப்பட்டது. ஆனால் இன்று வரை ஒரு ஆயுதம் கூட கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சதாம் உசேன் பிடிக்கப்பட்டு அமெரிக்காவின் பாதுகாப்பில் இருந்தபோது அவரிடம் 20 முறை எப்பிஐ ஏஜென்டுகள் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் ஐந்து முறை சாதாரண முறையில் அவரிடம் பேசியுள்ளனர்.சதாமை விலை மதிக்கத்தக்க கைதி நம்பர் 1 என்று பெயரிட்டுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். பின்லேடனுடன் தொடர்பில்லை..இந்த விசாரணையின்போது இன்னொரு முக்கிய மான விஷயமும் அமெரிக்கர்களுக்குத் தெரிய வந்ததாம். அல் கொய்தா தலைவர் பின்லேடனுக்கும், தனக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்று சதாம் உசேன் திட்டவட்டமாக தெரிவித்தாராம்.மேலும், வட கொரியாதான் தனது மிக நெருங்கிய தோழன் என்றும் சதாம் கூறியுள்ளார்.1991 பெர்சிய வளைகுடாப் போரின்போது, இஸ்ரேலிய நிலைகளை நோக்கி ஸ்கட் ஏவுகணைகளை வீசுமாறு தான்தான் உத்தரவிட்டதாகவும் சதாம் தெரிவித்தாராம். அரபு மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் இஸ்ரேல்தான் என்று தான் நினைத்ததால் இவ்வாறு உத்தரவிட்டதாக சதாம் கூறினாராம்.மேலும் 1990ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சதாம் தொலைபேசியை பயன்படுத்தியதே இல்லையாம். ஆட்கள் மூலம்தான் தகவல்களை சொல்லி அனுப்புவாராம், பெறுவாராம்.2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

0 Comments: